லண்டனில் அதிர்ச்சி.. லாரியில் 11 பேரைக் கடத்திச் சென்ற இந்திய வாலிபருக்கு சிறைத்தண்டனை!

 

இங்கிலாந்திலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு லாரிகளின் பின்புறத்தில் மனிதர்களைப் பதுக்கி வைத்துச் சட்டவிரோதமாகக் கடத்தி வந்த சர்வதேச மனிதக் கடத்தல்கும்பலைச் சேர்ந்த 25 வயது இந்திய வாலிபருக்கு லண்டன் நீதிமன்றம் 5 ஆண்டுகள் கடுமையான சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இங்கிலாந்து எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் லண்டன் காவல்துறையின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில், கடந்த 2024-ஆம் ஆண்டு இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று கொண்டிருந்த ஒரு பெரிய சரக்கு லாரியை எல்லை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த லாரியின் பின்புறமிருந்த ரகசிய அறையில், உரிய ஆவணங்களின்றி உயிருக்கு ஆபத்தான சூழலில் 11 இந்தியர்கள் பதுங்கியிருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்து மீட்டனர்.

மீட்கப்பட்டவர்களிடம் இங்கிலாந்து குடிவரவுத் துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இங்கிலாந்தில் தற்காலிகமாக வசித்து வந்த ஜஸ்கிரத் சிங் (25) என்ற இந்திய இளைஞர் தான் இந்த ஒட்டுமொத்த மனிதக் கடத்தல் நெட்வொர்க்கின் பின்னணியில் இருக்கும் முக்கிய குற்றவாளி என்பது வெளிச்சத்திற்கு வந்தது.

கைது நடவடிக்கைக்கு அஞ்சி கடந்த ஓராண்டிற்கும் மேலாகத் தலைமறைவாக இருந்த ஜஸ்கிரத் சிங்கை, லண்டன் மாநகரப் போலீசார் கடந்த 2025-ஆம் ஆண்டு இறுதியில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்திக் கைது செய்தனர்.

ஜஸ்கிரத் சிங்கிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட அவரது அதிநவீன செல்போனை பிரிட்டன் சைபர் குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர். அதில், சட்டவிரோதமாக எல்லை தாண்டுவது எப்படி என்பது குறித்து அவர் பதிவிட்ட ரகசிய டிக் டாக் வீடியோக்களும், கடத்தல் மூலம் சம்பாதித்த பல கோடி ரூபாய் பணத்தை வீட்டில் உள்ள படுக்கையின் மேல் குவித்து வைத்து அவர் கொண்டாடிய வீடியோ ஆதாரங்களும் சிக்கின.

போலீசரின் டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் வாக்குமூலங்களின் அடிப்படையில், இந்த மனிதக் கடத்தல் தொழில் மூலம் தான் பல கோடி ரூபாய் சட்டவிரோதமாகச் சம்பாதித்ததை ஜஸ்கிரத் சிங் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார். இவ்வழக்கை விசாரித்த லண்டன் கிரவுன் நீதிமன்ற நீதிபதி, மனித உயிர்களைப் பணத்திற்காக ஆபத்தில் ஆழ்த்திய ஜஸ்கிரத் சிங்கின் குற்றத்தை வன்மையாகக் கண்டித்து, அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார். மேலும், அவர் சட்டவிரோதமாகச் சேர்த்த அனைத்து சொத்துகளையும், பணத்தையும் முடக்க இங்கிலாந்து உள்நாட்டு அமைச்சகத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.