தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... மதுரை மேலூரில் மாயமான சிறுவன் சடலமாக மீட்பு!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே தனியாமங்கலம் பகுதியில் காணாமல் போன 7 வயது சிறுவன் முத்துவேல், 90 காவலர்கள் அடங்கிய 5 தனிப்படைகளின் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, பாழடைந்த வீடொன்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனியாமங்கலத்தைச் சேர்ந்த பெரியகருப்பன் - சத்யா தம்பதியினரின் 7 வயது மகன் முத்துவேல், கடந்த அக்டோபர் 25-ம் தேதி கோயில் அருகே விளையாடச் சென்ற நிலையில் மாலை வரை வீடு திரும்பவில்லை. இது குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கீழவளவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு செய்து, 90 காவலர்கள் கொண்ட 5 தனிப்படைகளை அமைத்து இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டார்.
அடுத்த நாளான அக்டோபர் 26ம் தேதி காலையில், அதே பகுதியைச் சேர்ந்த ராஜாங்கம் என்பவருக்குச் சொந்தமான ஆள் நடமாட்டமற்ற பாழடைந்த வீட்டிலிருந்து சிறுவன் முத்துவேலின் சடலம் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அக்டோபர் 25ம் தேதியன்று கோயில் அருகே முத்துவேலும், அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுவனும் விளையாடிக் கொண்டிருந்த போது, விளையாட்டாக அந்த 10 வயது சிறுவன் முத்துவேலின் கழுத்தில் கயிற்றை இறுக்கியுள்ளான். அதனைத் தொடர்ந்து ஓடிய போது முத்துவேல் கோயில் சுவரில் மோதி முன்பற்கள் உடைந்த நிலையில், தண்ணீர் கேட்பதற்காக அந்தச் சிறுவனின் வீட்டிற்குச் சென்று அங்குள்ள தாய் சந்தியா (32) முன்னிலையில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளான்.
முத்துவேல் உயிரிழந்ததைக் கண்ட சந்தியா, தனது மகனைக் காப்பாற்றுவதற்காகவும் சம்பவத்தை மறைப்பதற்காகவும், சிறுவனின் உடலை எடுத்துச் சென்று அருகில் இருந்த பாழடைந்த வீட்டில் வீசி மறைத்து வைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாகக் குற்றத்தை மறைத்து தடயங்களை அழிக்க முயன்ற சந்தியாவை கீழவளவு காவல்துறையினர் கைது செய்து நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 10 வயது சிறுவன் சட்டப்படி சிறார் நீதிக் குழுமத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளான். விளையாட்டில் ஏற்பட்ட அசம்பாவிதத்தை மறைக்க முயன்று சிறுவனின் சடலத்தைப் பாழடைந்த வீட்டில் வீசிய சம்பவம் மதுரை பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.