தமிழகமே அதிர்ச்சி... இளம்பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பாலியல் தொல்லை தந்த போலீஸ் ஏட்டு! 

 

தூத்துக்குடி சவேரியார்புரத்தைச் சேர்ந்த தனிப்பிரிவு காவலர் ஒருவர், விசாரணைக்குச் சென்ற இடத்தில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதோடு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் செல்வின் பிரபு (37). இவர் காவல் துறையில் தனிப்பிரிவு ஏட்டாகப் பணியாற்றி வருகிறார். திருமணம் வரன் தொடர்பான புகாரை விசாரிப்பதற்காகச் செல்வின் பிரபு அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது அந்தப் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் தருவைகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் ஏட்டு செல்வின் பிரபு மீது காவல்துறையினர் தீவிரப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையில் பொறுப்பான பதவியில் இருப்பவரே பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய சம்பவம் தூத்துக்குடி பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவலரே இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டது குறித்துத் தகவலறிந்த தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் அடிப்படையில், துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கையாக ஏட்டு செல்வின் பிரபுவை பணி இடைநீக்கம் (Suspension) செய்து எஸ்.பி. அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.