தமிழகமே அதிர்ச்சி... காவல் நிலையத்திற்குள் பெண் தீக்குளிப்பு - உறவினர்கள் போராட்டம்!
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள புதுப்பேட்டை காவல் நிலையத்திற்குள், தனது கணவர் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்ததாகக் குற்றம்சாட்டிப் பெண் ஒருவர் உடலில் தீ வைத்தபடி உள்ளே நுழைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்தவர் லட்சாதிபதி. இவர் மீது புதுப்பேட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு ஒன்று பதிவு செய்துள்ளனர். ஆனால், தனது கணவர் மீது காவல்துறையினர் வேண்டுமென்றே பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாக அவரது மனைவி தரப்பில் தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
காவல்துறையின் நடவடிக்கையால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான லட்சாதிபதியின் மனைவி, இன்று புதுப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்தபடி காவல் நிலையத்திற்குள் ஓடி வந்ததால் அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
உடலில் தீப்பற்றி எரிந்த நிலையில் அலறிய அப்பெண்ணைப் பார்த்த காவல்துறையினர் மற்றும் அங்கிருந்தவர்கள் உடனடியாகச் செயல்பட்டுத் தீயை அணைத்தனர். எனினும், இந்தச் சம்பவத்தில் அப்பெண்ணுக்கு உடல் முழுவதும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. பலத்த தீக்காயமடைந்த அப்பெண் உடனடியாக மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கடலூர் அரசு தலைமை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் புதுப்பேட்டை காவல் நிலையம் முன்பும், மருத்துவமனை வளாகத்திலும் திரண்டனர். பொய் வழக்கு பதிவு செய்து ஒரு பெண்ணை இந்த விபரீத முடிவுக்குத் தள்ளிய சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது உடனடியாகத் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்துக் காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் விசாரணை நடத்தி வருவதோடு, அசம்பாவிதங்களைத் தவிர்க்க புதுப்பேட்டை காவல் நிலையப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.