தமிழகத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி... மருத்துவமனை லிப்டில் இளம்பெண்ணுக்குப் பாலியல் தொல்லை!

 

திருநெல்வேலியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றின் லிப்டில் வைத்துப் பெண் ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த மருத்துவமனை வளாகத்திற்குள்ளேயே இத்தகைய துணிகரச் சம்பவம் அரங்கேறியுள்ளது நெல்லை மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் அண்மையில் நெல்லையில் உள்ள குறிப்பிட்ட தனியார் மருத்துவமனைக்குத் தனது சொந்தக் காரியமாக வந்துள்ளார். அப்போது, அங்குள்ள லிப்ட் மூலம் மேல் தளத்திற்குச் செல்ல முற்பட்ட போது, அவருடன் உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர், யாரும் இல்லாத நேரத்தைப் பயன்படுத்திக் கொண்டு அந்தப் பெண்ணிற்குப் பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து அநாகரிகமாக நடந்து கொண்டதாகத் தெரிகிறது.

இச்சம்பவத்தால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாக இது குறித்து நெல்லை உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பெண்ணின் புகாரைத் தொடர்ந்து வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில், பெண்ணிற்குத் தொல்லை கொடுத்த நபர் பாஸ்கர் என்பது அடையாளம் காணப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த பாஸ்கரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக அவரிடம் போலீசார் தங்களது பாணியில் மேல் விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.