திரையுலகில் அதிர்ச்சி... பிரபல தமிழ்ப்பட நடிகை விவாகரத்து அறிவிப்பு - 4 ஆண்டு காலத் திருமண வாழ்க்கை முடிகிறது!
தமிழ் மற்றும் கன்னடத் திரையுலகில் பிரபலமான நடிகையும், பிக்பாஸ் முன்னாள் போட்டியாளருமான சுபா பூஞ்சா, தனது கணவரிடமிருந்து விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகியிருப்பது சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2004-ஆம் ஆண்டு தளபதி விஜய் நடித்த 'மதுர' படத்தின் இயக்குனர் ஆர்.மாதேஷ் இயக்கத்தில், நடிகர் துஷ்யந்த் நடிப்பில் வெளியான 'மச்சி' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சுபா பூஞ்சா. அதனைத் தொடர்ந்து தமிழில் சற்றே இடைவெளி விட்ட அவர், கன்னடத் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். பல சூப்பர் ஹிட் கன்னடப் படங்களில் நடித்த சுபா, கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டு ரசிகர்களின் பெரும் ஆதரவைப் பெற்றார். தமிழில் கடைசியாக இவர் 'சுட்டபழம்' என்ற திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
திரைத்துறையில் பிஸியாக இருந்த நடிகை சுபா பூஞ்சா, கடந்த 2022-ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான சுமந்த் பில்லாவா என்பவரைக் காதலித்துத் பெற்றோர் சம்மதத்துடன் விமரிசையாகத் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணப் புகைப்படங்கள் அப்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே சுபா பூஞ்சா மற்றும் அவரது கணவர் சுமந்த் பில்லாவா இடையே கடுமையான குடும்பக் கருத்து வேறுபாடுகள் மற்றும் மனக்கசப்புகள் ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இருதரப்பு குடும்பத்தினரும் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியும் சுமுகமான முடிவு எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனைத் தொடர்ந்து, தங்களது 4 ஆண்டு காலத் திருமண வாழ்க்கையை இத்துடன் முடிவுக்குக் கொண்டு வர இருவருமே பரஸ்பரம் சம்மதித்துள்ளனர். இதன் அடிப்படையில், தங்களுக்கு விவாகரத்து (Divorce) வழங்கி உத்தரவிடக் கோரி இருவரும் வழக்கறிஞர் மூலம் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
அடுத்தடுத்து சினிமா பிரபலங்கள் தங்களது திருமண வாழ்க்கையை முறித்துக் கொண்டு வரும் நிலையில், பிக்பாஸ் பிரபலம் சுபா பூஞ்சாவின் இந்த விவாகரத்து முடிவு ரசிகர்களிடையே சற்றே சோகத்தையும், சினிமா வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.