காலையிலேயே அதிர்ச்சி... கார் மீது சொகுசுப் பேருந்து மோதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி!
தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் இன்று அதிகாலை நேரிட்ட பயங்கர சாலை விபத்தில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். கட்டுப்பாட்டை இழந்த தனியார் சொகுசுப் பேருந்து ஒன்று, இவர்கள் பயணித்த கார் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது காலையிலேயே துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம், நல்கொண்டா மாவட்டம் பெத்தகாபர்த்தி பகுதி அருகே உள்ள நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை ஒரு தனியார் சொகுசுப் பேருந்து அதிவேகமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்தப் பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்பைத் தாண்டி, எதிரே வந்த ஸ்விஃப்ட் கார் மீது மிகக் கொடூரமாக மோதியது.
பேருந்து மோதிய வேகத்தில் கார் முற்றிலுமாக நசுங்கி உருக்குலைந்தது. இந்த விபத்தில் காரின் உள்ளே பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரை ஓட்டி வந்த ஓட்டுநர் மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பலத்த காயங்களுடன் தப்பினார். அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்து நெடுஞ்சாலைப் பயணிகள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சித்யால போலீசார் மீட்புப் பணிகளைத் முடுக்கிவிட்டனர். நசுங்கிய காருக்குள் இருந்து உயிரிழந்த 4 பேரின் சடலங்களையும் போலீசார் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக நல்கொண்டா அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்துச் சித்யால போலீசார் முறைப்படி வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய தனியார் பேருந்து ஓட்டுநரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று அதிகாலையிலேயே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சாலை விபத்தில் பலியான சம்பவம் தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பகுதிகளில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.