விடிந்ததுமே அதிர்ச்சி... டிராக்டர் கவிழ்ந்து 5 பேர் பலி; 17 பேர் படுகாயம்!

 

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விவசாயத் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்த கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் இன்று காலை விவசாயப் பணிக்காக ஏராளமான தொழிலாளர்களைச் சுமந்துகொண்டு டிராக்டர் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் சாலையோரப் பள்ளத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்தச் சம்பவத்தில் டிராக்டரின் அடியில் சிக்கி 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், காயமடைந்த 17 பேரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்துப் பேசிய லக்னோ சரக காவல் தலைவர் கிரண், "வாகனத்தின் அதிவேகமே இந்த விபத்திற்குக் முதன்மை காரணமாக அமைந்துள்ளது. டிராக்டர் போன்ற விவசாயப் பயன்பாட்டு வாகனங்களில் ஆட்களையோ அல்லது பயணிகளையோ ஏற்றிச் செல்வது முற்றிலும் சட்டவிரோதமானது. விதிமுறைகளை மீறியது குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" எனக் கூறினார்.