தடுப்பு சுவரில் மோதி பேருந்தில் தீ விபத்து - 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பலி!

 

வியட்நாமில் 33 பயணிகளுடன் நள்ளிரவில் சென்று கொண்டிருந்த சொகுசுப் பேருந்து ஒன்று சாலையோரத் தடுப்புச் சுவரில் மோதித் தீப்பிடித்ததில், 3 குழந்தைகள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

வியட்நாமின் லம் டாங் மாகாணத்தில் இருந்து ஹோ சி மின் (Ho Chi Minh) நகரத்தை நோக்கி 33 பயணிகளுடன் நள்ளிரவில் ஒரு சொகுசுப் பேருந்து புறப்பட்டுச் சென்றது.

தடுப்புச் சுவரில் மோதல்: அதிகாலை வேளையில் டாங் நெய் (Dong Nai) தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்திலிருந்த தடுப்புச் சுவரில் பலத்த சத்தத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.

மளமளவெனப் பரவிய தீ: மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதியில் திடீரெனத் தீப்பிடித்தது. பயணிகள் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த நிலையில், அத்தீ கணப்பொழுதில் பேருந்து முழுவதும் மளமளவெனப் பரவியது.

தீயின் புகையினாலும் வெப்பத்தினாலும் விழித்தெழுந்த பயணிகள் உயிருக்குப் பயந்து அலறியடித்தபடி பேருந்தை விட்டு வெளியேற ஓடினர்.

இருப்பினும், தீயின் வேகம் அதிகமாக இருந்ததால் பேருந்திலிருந்து உடனடியாக வெளியேற முடியாமல் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் தீயில் கருகிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீர பீய்ச்சியடித்துத் தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், விபத்து குறித்து வியட்நாம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.