காலையிலேயே அதிர்ச்சி... பிரபல மலையாள இளம் இயக்குநர் ஸ்ரீஜி பாலகிருஷ்ணன் காலமானார்!
மலையாளத் திரைப்பட மற்றும் நாடக இயக்குநரும், பாலக்காடு கலால் துறையின் உதவி ஆய்வாளருமான ஸ்ரீஜி பாலகிருஷ்ணன் (43) இன்று காலை மாரடைப்பு காரணமாக திடீரெனக் காலமானார். இளம் இயக்குநரான இவரின் மறைவு மலையாளத் திரையுலகினர் மற்றும் நாடகக் கலைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இன்று அதிகாலை அவருக்கு லேசான உடல் அசௌகரியம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வீட்டில் உள்ள கழிவறைக்குச் செல்ல எழுந்தபோது, அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனால் பதறியடித்த குடும்பத்தினர் அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஸ்ரீஜி பாலகிருஷ்ணன் ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
கலைத் துறையின் மீது கொண்ட ஈடுபாட்டால், மலையாளத்தில் வெளியான 'சந்திரனும் போலீசும்' என்ற திரைப்படத்தின் மூலம் இவர் இயக்குநராக முத்திரைப் பதித்தார். திரைப்படங்கள் மட்டுமன்றி நாடகத் துறையிலும் சிறந்து விளங்கிய இவர், 'நாயிடம் ஜாக்கிரதை', 'மாயா தர்ப்பன்', 'செல்ஃபி' போன்ற புகழ்பெற்ற பல மேடை நாடகங்களையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசுப் பணியில் இருந்து கொண்டே கலைச் சேவையாற்றி வந்த ஒரு சிறந்த ஆளுமையின் மறைவிற்குப் பல முன்னணி மலையாளத் திரைப்பிரமுகர்கள் மற்றும் சக அரசு அதிகாரிகள் தங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.