காலையிலேயே அதிர்ச்சி... இலங்கை கடற்படை அட்டூழியம்... மேலும் 9 தமிழக மீனவர்கள் கைது! 

 

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற 9 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் கடலோர கிராமங்களில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரத்திலிருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 9 தமிழக மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் வழக்கம் போல் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 9 மீனவர்களையும் அவர்களின் படகையும் கைப்பற்றிய இலங்கை கடற்படையினர், மன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 5 நாட்களுக்கு முன்புதான், படகின் என்ஜின் பழுதாகி இலங்கை கடல் பகுதியில் கரைஒதுங்கிய 11 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். அடுத்தடுத்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், அவர்களின் வாழ்வாதாரமான படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீனவர் குடும்பங்களிடையே கடும் கொந்தளிப்பையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளது.

இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்துத் தமிழக மீனவர்களையும், அவர்களின் படகுகளையும் உடனடியாக மீட்க மத்திய, மாநில அரசுகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரம் மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.