நெல்லையில் அதிர்ச்சி.. நடுரோட்டில் தலை துண்டித்து இளைஞர் கொலை!
நெல்லையில் பட்டப்பகலில் நடுரோட்டில் நபர் ஒருவர் தலை துண்டித்துக் படுகொலை செய்யப்பட்டுள்ள கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்தப் பகுதியையும் உலுக்கியுள்ளது.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி அருகே, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் 45 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவரைத் துரத்தித் துரத்தி வெட்டி, அவரது தலையைத் துண்டித்து நடுரோட்டில் வீசிச் சென்றுள்ளனர்.
கல்லிடைக்குறிச்சி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நடத்திய முதற்கட்ட விசாரணையில், கல்லிடைக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பிரதான சாலையின் நடுவே இன்று மாலை, துண்டிக்கப்பட்ட நிலையில் மனிதத் தலை ஒன்று கிடப்பதைக் கண்டு அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் அலறியடித்து ஓடியுள்ளனர்.
இது குறித்து உடனடியாக அப்பகுதி மக்கள் கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்ததும் நெல்லை மாவட்ட எஸ்பி மற்றும் கல்லிடைக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
கொலை செய்யப்பட்ட நபருக்குச் சுமார் 45 வயது இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்ற விபரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. அவரது உடலைக் கண்டறியும் பணியிலும், கொலையாளிகளைப் பிடிப்பதிலும் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்:
பழிக்குப் பழி வாங்கும் நோக்கில் இந்த விபரீதம் நடந்ததா, அல்லது குடும்பத் தகராறு மற்றும் முன்விரோதம் காரணமாகக் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர். சம்பவ இடத்தின் அருகே உள்ள கண்காணிப்புக் கேமரா காட்சிகளைப் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், கொலையாளிகளைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுத் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
வழக்கமாகப் பரபரப்பாகக் காணப்படும் பிரதான சாலையில், அதுவும் பட்டப்பகலில் அரங்கேறியுள்ள இந்த கொடூரத் தலை துண்டிப்புக் கொலைச் சம்பவம் கல்லிடைக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரக் கிராம மக்களிடையே பெரும் அச்சத்தையும் பதைபதைப்பையும் ஏற்படுத்தியுள்ளது.