திருப்பூரில் அதிர்ச்சி... செல்போனில் வேறொருவருடன் பேசியதால் கள்ளக்காதலி கொலை!

 

திருப்பூரில் கள்ளக்காதலியைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்த பனியன் நிறுவனத் தொழிலாளியைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

அரியலூர் சாத்தம்பாடியைச் சேர்ந்த ராதிகா (36) என்பவருக்கும், திருப்பூர் வெள்ளியங்காட்டைச் சேர்ந்த தையல் தொழிலாளி அருண்குமார் (36) என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுகளாகக் கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது.

ராதிகா கடந்த சில நாட்களாக அடிக்கடி செல்போனில் வேறு ஒருவருடன் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அருண்குமாருக்கும் அவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் ராதிகாவின் வீட்டுக்குச் சென்ற அருண்குமாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அருண்குமார், ராதிகாவின் கழுத்தை நெரித்துக் கீழே தள்ளியதில், கட்டிலில் தலை மோதி அவர் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

திறந்த கிடந்த வீட்டுக்குள் ராதிகா சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் திருப்பூர் தெற்கு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகத் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.