திருவள்ளூரில் அதிர்ச்சி... 7,000 போதை மாத்திரைகள் பதுக்கி விற்ற 2 பேர் கைது!

 

திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் பிரனீத் உத்தரவின் பேரில் தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, போதை மாத்திரைகளை விற்ற வழக்கில் தொடர்புடைய முக்கிய நபர்கள் ஐதராபாத் மற்றும் கர்நாடகத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 18-ம்தேதி பெரியகுப்பம் பகுதியில் 3,700 போதை மாத்திரைகளுடன் சாம் சுந்தர் மற்றும் முகமது அஃப்ரித் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஐதராபாத்தைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் என்பவர்தான் மாத்திரைகளை விநியோகித்தது தெரியவந்தது.

சிடிஆர் பகுப்பாய்வு மூலம் தகவல்கள் சேகரிக்கப்பட்டு, ஐதராபாத் நாம்பள்ளி பகுதியில் பதுங்கியிருந்த முகமது இஸ்மாயிலை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 3,000 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டார்.

முகமது இஸ்மாயிலிடம் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், கர்நாடக மாநிலம் குல்பர்கா பகுதியைச் சேர்ந்த மத்தின்பாஷா என்பவர் இவர்களுக்குத் தொடர்ந்து போதை மாத்திரைகளை வழங்கி வந்தது அம்பலமானது. உடனே குல்பர்கா விரைந்த திருவள்ளூர் தனிப்படை போலீசார், மத்தின்பாஷாவைக் கைது செய்து அவரிடமிருந்து 4,000 போதை மருந்துகள் அடங்கிய பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தொடர்ந்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுப் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.