திருவள்ளூரில் அதிர்ச்சி... பஜ்ஜி சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழப்பு!
இப்படியெல்லாம் கூட மரணம் நேருமா என்று அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள் உறவினர்கள். பஜ்ஜி சாப்பிட்ட 9 வயது சிறுமியின் மரணம் நிலைகுலைய செய்திருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் லச்சுவாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். இவர் செங்குன்றம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருடைய மகள் ஸ்ரீத்திகா அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 3ம் தேதி செந்தில்குமார் தனது மகள் ஸ்ரீத்திகாவுடன் பெரியபாளையம் அடுத்த தண்டலம் பஜார் வீதிக்கு சென்றார். அங்குள்ள கடையில் வாங்கிய பஜ்ஜியைச் சாப்பிட்ட ஸ்ரீத்திகா திடீரென வாந்தி எடுத்து மயங்கி கீழே விழுந்தார்.
உடனடியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுமி அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சைப் பலனின்றி கடந்த சனிக்கிழமை இரவு சிறுமி பரிதாபமாக உயிரிழந்தது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.