விழுப்புரத்திலும் அதிர்ச்சி... தேர்தலை புறக்கணித்த வானூர் வாக்காளர்கள் - வெறிச்சோடிய 10, 11-வது வார்டு பூத்கள்!
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் (தனி) தொகுதியில் உள்ள 10 மற்றும் 11-வது வார்டு மக்கள் தேர்தலை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துள்ளனர்.
வானூர் பேரூராட்சிக்குட்பட்ட இந்த வார்டுகளில் வசிக்கும் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், பல ஆண்டுகளாகத் தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை எனக் குற்றம்சாட்டியுள்ளனர். குறிப்பாக பல ஆண்டுகளாகத் தங்களுக்குச் சீரான குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை. குண்டும் குழியுமான சாலைகளால் அவசரக் காலங்களில் கூட வாகனங்கள் வர முடிவதில்லை.
முறையான வடிகால் வசதி இல்லாததால் சுகாதாரச் சீர்கேடு நிலவுகிறது. "பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இந்த முறை தேர்தலைப் புறக்கணித்துத் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்ய முடிவு செய்தோம்" எனப் பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில், 11 மணி வரை ஒருவர் கூட வாக்குச்சாவடிக்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த தேர்தல் அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர், சம்பந்தப்பட்ட வார்டுகளுக்குச் சென்று மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எனினும், "உறுதியான வாக்குறுதி கிடைக்கும் வரை வாக்களிக்க மாட்டோம்" என்பதில் மக்கள் பிடிவாதமாக உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 11 மணி நிலவரப்படி 37.56% வாக்குகள் பதிவாகியுள்ள நிலையில், வானூரின் இந்தப் புறக்கணிப்புச் சம்பவம் மாவட்ட அளவில் வாக்குச் சதவீதத்தைப் பாதிக்கும் எனக் கருதப்படுகிறது. ஏற்கனவே நாங்குநேரி மற்றும் வேங்கைவயல் பகுதிகளில் மக்கள் தேர்தலைப் புறக்கணித்துள்ள நிலையில், வானூரும் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது.