திமுகவிற்கு அதிர்ச்சி... திருவள்ளூர் மாவட்ட முக்கிய நிர்வாகி தவெக-வில் இணைப்பு!

 

வடதமிழக திமுகவிற்குப் பலத்த அதிர்ச்சியளிக்கும் வகையில் திருவள்ளூர் மேற்கு மாவட்டத் துணைச் செயலாளர் வி.சி.ஆர். குமரன் கட்சியிலிருந்து விலகி, ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்ட திமுக அரசியலில் செல்வாக்குமிக்க முகமாக வலம் வந்த வி.சி.ஆர். குமரன், தற்போதைய திமுக மாவட்டத் தலைமையின் செயல்பாடுகள் மற்றும் உள்ளூர் உட்கட்சி அரசியல் அழுத்தங்கள் காரணமாகக் கடுமையான அதிருப்தியில் இருந்துள்ளார். இதன் காரணமாக தனது திமுக அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாகத் தலைமைக்குக் கடிதம் அனுப்பினார்.

கட்சியை விட்டு வெளியேறிய அடுத்த சில நிமிடங்களிலேயே, சென்னை தவெக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக அமைச்சருமான என். ஆனந்த் முன்னிலையில் வி.சி.ஆர். குமரன் தன்னைத் தமிழக வெற்றிக் கழகத்தில் முறைப்படி இணைத்துக் கொண்டார். அவருக்கு அமைச்சர் ஆனந்த் தவெக சால்வை அணிவித்து, கட்சியின் புதிய உறுப்பினர் அட்டையை வழங்கி வரவேற்றார்.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசுப் பொறுப்பேற்றது முதல், தமிழகத்தின் பல்வேறு எதிர்க்கட்சிகளிலிருந்து முக்கியப் பிரமுகர்கள் தவெக-வை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிமுகவின் இசக்கி சுப்பையா பதவியை ராஜினாமா செய்துவிட்டுத் தவெக-வில் இணைந்ததால் அங்கு இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், வடமாவட்ட திமுகவின் முக்கியத் தூணாகக் கருதப்படும் திருவள்ளூர் மேற்கு மாவட்டத் துணைச் செயலாளரே தவெக-விற்குத் தாவியிருப்பது அறிவாலய மேலிடத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.