உலக நாடுகளுக்குப் பெரும் அதிர்ச்சி... ஹார்முஸ் நீரிணையில் 'மரணப் பொறி' - கடல் கண்ணிவெடிகளால் கப்பல்கள் முடக்கம்: ஈரான் வெளியிட்ட பகீர் வரைபடம்!
மத்திய கிழக்கு ஆசியாவில் போர் மேகங்கள் விலகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் ராணுவம் வைத்துள்ள 'கடல் கண்ணிவெடிகள்' உலக நாடுகளைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும், லெபனானில் இஸ்ரேல் நடத்திய கொடூரத் தாக்குதலே இந்த நிலைக்குக் காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த 40 நாள் போர், கடந்த 7-ஆம் தேதி ஒரு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு வந்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த இந்த இடைக்கால அமைதியை ஈரானும் ஒப்புக்கொண்டது. இதனால், உலக வர்த்தகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டு, கப்பல் போக்குவரத்து சீராகும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், "இந்த போர் நிறுத்தம் லெபனானுக்குப் பொருந்தாது" என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்ததோடு, லெபனானில் அதிபயங்கர வான் தாக்குதலை நடத்தினார். இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் முக்கியத் தலைவர் உள்பட 250-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டது, ஈரானை ஆத்திரமடையச் செய்துள்ளது.
இஸ்ரேலின் இந்தச் செயலுக்குப் பதிலடியாக, ஹார்முஸ் நீரிணையை ஈரான் மீண்டும் மூடியுள்ளது. இது குறித்துப் பேசிய ஈரானின் துணை வெளியுறவு மந்திரி சயீத் கதிப்சாதே, "அமெரிக்காவின் ஆக்கிரமிப்பும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலும் நின்றால் மட்டுமே கப்பல்கள் செல்ல அனுமதிப்போம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இருப்பினும், அதைவிடப் பெரிய ஆபத்தாக ஈரான் ராணுவம் ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. போரின் போது ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் ஏராளமான 'கடல் கண்ணிவெடிகள்' பொருத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வழியாகக் கப்பல்கள் செல்வது தற்போது தற்கொலைக்குச் சமம் என்றும் அறிவித்துள்ளது. கண்ணிவெடிகள் எங்குப் புதைக்கப்பட்டுள்ளன என்பதைக் குறிக்கும் 'மரண வரைபடத்தையும்' ஈரான் ராணுவம் வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கண்ணிவெடி அச்சம் காரணமாக, ஈரானிய ராணுவம் ஒரு புதிய கடினமான வழித்தடத்தைப் பரிந்துரைத்துள்ளது. ஓமன் வளைகுடாவிலிருந்து வடக்கு நோக்கி 'லராக்' தீவை அடைந்து, அங்கிருந்து பாரசீக வளைகுடாவுக்குச் செல்ல வேண்டும். வெளியேறும் கப்பல்கள் பாரசீக வளைகுடாவிலிருந்து லராக் தீவின் தெற்குப் பகுதி வழியாக ஓமன் வளைகுடாவை நோக்கிச் செல்ல வேண்டும்.
இந்தக் குழப்பமான மற்றும் அபாயகரமான சூழலால், போர் நிறுத்தம் அமலான முதல் நாளில் வெறும் 3 கப்பல்கள் மட்டுமே இந்த நீரிணையைக் கடந்துள்ளன. இதனால் கச்சா எண்ணெய் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு, சர்வதேச சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
ஒருபுறம் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் போன்ற உலகத் தலைவர்கள் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டாலும், லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்களும், ஹார்முஸ் நீரிணையில் ஈரான் வைத்துள்ள கண்ணிவெடிகளும் போர் நிறுத்தம் எந்த நேரத்திலும் முறியும் என்பதையே காட்டுகின்றன.
உலக வர்த்தகத்தின் நுழைவாயிலில் புதைக்கப்பட்டுள்ள இந்த 'மரணப் பொறிகள்' அகற்றப்படுமா அல்லது அடுத்தகட்ட மோதலுக்கு வழிவகுக்குமா? என்பதே இப்போதைய மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.