அதிர்ச்சியில் எடப்பாடி... சி.விஜயபாஸ்கர் தவெக-வில் இணைய அதிமுக ஆதரவாளர்கள் தீர்மானம்!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக உட்கட்சிப் பூசல்களும் நிர்வாகிகளின் வெளியேற்றமும் தொடர்ந்து வரும் சூழலில், கட்சியின் மிக முக்கியத் தூணாகக் கருதப்படும் முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் புதுக்கோட்டையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று மாலை நடைபெற்ற சி.விஜயபாஸ்கரின் முக்கிய ஆதரவாளர்கள் மற்றும் உள்ளூர் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் துக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அதிமுகவின் முக்கிய ஒன்றியச் செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் மற்றும் பேரூர் கழக நிர்வாகிகள் பெருமளவில் கலந்து கொண்டனர்.

தற்போதைய அரசியல் சூழலில் அதிமுகவில் தொடர்ந்து நீடிப்பது எதிர்காலத்திற்கு உகந்தது அல்ல என்றும், எனவே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உடனடியாகத் தனது ஆதரவாளர்களுடன் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தவெக-வில் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் கூட்டத்தில் ஒருமனதாக விவாதிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் சி.விஜயபாஸ்கருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ஒரு முக்கிய அரசியல் தீர்மானம் முறைப்படி நிறைவேற்றப்பட்டது.

"முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெகவில் தன்னை இணைத்துக் கொள்ளும் பட்சத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒட்டுமொத்த அடிமட்டத் தொண்டர்களும், நிர்வாகிகளும் அவரது முடிவிற்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, அவருக்கு எப்போதும் போல் அரணாகவும் உறுதுணையாகவும் இருப்போம்."

அதிமுகவின் தென்மண்டல மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தின் மிக வலிமையான தேர்தல் முகமாக விளங்குபவர் சி.விஜயபாஸ்கர். ஏற்கனவே கடந்த சில வாரங்களாக அதிமுகவின் பல்வேறு இரண்டாம் கட்ட மற்றும் மூன்றாம் கட்ட முக்கிய நிர்வாகிகள் தவெக-வில் இணைந்து புதிய அரசில் பொறுப்புகளைப் பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சி.விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் பகிரங்கமாக இத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது, அவர் தவெக-வில் இணைவதற்கான ஆரம்பகட்டப் பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதையே காட்டுவதாக அரசியல் விமரிசகர்கள் கருதுகின்றனர்.

இன்று சென்னை கோட்டையில் தவெக அரசின் முதல் சட்டசபைக் கூட்டத்தொடர் தொடங்கியுள்ள வேளையில், புதுக்கோட்டையில் அரங்கேறியுள்ள இந்தத் தீர்மான அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முக்கியத் தலைவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.