பிரதமர் பேசிய 2 நாளில் அதிர்ச்சி... தங்கம், வெள்ளி மீதான வரி 15 சதவீதமாக உயர்வு!
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில், மத்திய நிதியமைச்சகம் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. மேற்காசியாவில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வணிக ரீதியான சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த வரி உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதால், இறக்குமதி செய்யப்படும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகளின் விலை கணிசமாக உயர வாய்ப்புள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு தெலுங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பொதுமக்கள் ஓராண்டுக்குத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். அந்நிய செலாவணி கையிருப்பு வேகமாக சரிந்து வருவதால், சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டு நாட்டுக்கு ஆதரவாக இருக்குமாறு அவர் வலியுறுத்தியிருந்தார். பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்த சில நாட்களிலேயே, மத்திய அரசு இந்த வரி உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்கம் மற்றும் வெள்ளி மீதான இந்த வரி உயர்வு, நகை சந்தையிலும், நுகர்வோர் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே சர்வதேச அளவில் நிலவும் பொருளாதாரச் சூழலால் தங்கம் விலை உச்சத்தில் இருக்கும் சூழலில், அரசின் இந்த முடிவு விலையை மேலும் அதிகரிக்கச் செய்யும் என்று பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். நாட்டின் நிதி நிலைத்தன்மையைக் கருத்தில் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, சாமானிய மக்களின் நகை வாங்கும் திட்டங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும்.