அதிர்ச்சி... 7-ம் வகுப்பு மாணவியை கர்ப்பமாக்கிய 17 வயது மாணவர் கைது; சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு!

 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே 7-ஆம் வகுப்பு படிக்கும் 12 வயதுச் சிறுமியைப் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிக் கர்ப்பமாக்கிய குற்றத்திற்காக 17 வயது ஐடிஐ மாணவனைப் போக்ஸோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆர்யநாடு பகுதியைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த சில நாட்களாகக் கடுமையான உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். சிறுமியின் உடல்நிலையில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்டு பதற்றமடைந்த அவரது பெற்றோர், உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்குச் சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள், அச்சிறுமி 7 மாதக் கர்ப்பிணியாக இருப்பதை உறுதி செய்து அதிர்ச்சியடைந்தனர். இச்சம்பவம் குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் உடனடியாக ஆர்யநாடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவமனை அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், பாதிக்கப்பட்ட சிறுமியிடம் குழந்தைகள் நலக் குழு உறுப்பினர்கள் முன்னிலையில் உணர்வுப்பூர்வமாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், சிறுமியின் நெருங்கிய உறவினரும், 17 வயதான ஐடிஐ மாணவருமான ஒருவனே ஆசை வார்த்தைகள் கூறி இக்கொடூரப் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டது வெளிச்சத்திற்கு வந்தது.

உடனடியாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் 17 வயது ஐடிஐ மாணவனைப் போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். அவர் 18 வயதுக்குட்பட்ட கூர்நோக்குச் சிறார் என்பதால், நீதிமன்ற உத்தரவின்படி சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.

பாதுகாப்பாக இருக்க வேண்டிய சொந்த உறவினரே 7-ஆம் வகுப்புச் சிறுமியைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திக் கர்ப்பமாக்கிய சம்பவம் திருவனந்தபுரம் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.