அதிர்ச்சி... த.வெ.க வேட்பாளர்களில் 2 பேர் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை... கடைசி நேரத்தில் புதிய வேட்பாளர்கள் மனுத்தாக்கல்!
தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றிருந்த ஊத்தங்கரை மற்றும் ஓசூர் தொகுதிகளில் கடைசி நேரத்தில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், வேட்பாளர்கள் மாற்றப்பட்டு, புதிய நபர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தகவல் த.வெ.க வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவடையும் நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தனது வேட்பாளர் பட்டியலில் சில கடைசி நிமிட மாற்றங்களைச் செய்துள்ளது.
ஊத்தங்கரை (தனி) தொகுதியில் முதலில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் குமரவேல். ஆனால் கடைசி நாளான இன்று மனுத்தாக்கல் செய்தவர் இளையராஜா. குமரவேல் சில தனிப்பட்ட காரணங்களாலோ அல்லது ஆவணச் சிக்கல்களாலோ இன்று பிற்பகல் வரையில் மனுத்தாக்கல் செய்யாத நிலையில் அவருக்குப் பதிலாகத் த.வெ.க தலைமை இளையராஜாவை வேட்பாளராகக் களமிறக்கியுள்ளது.
அதே போன்று ஓசூர் தொகுதியில் முதலில் அறிவிக்கப்பட்டவர் அம்ரிஷ். அம்ரிஷ் வேட்புமனு தாக்கல் செய்யாத நிலையில், ஓசூர் தொகுதியில் வலுவான போட்டியைக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில், உள்ளூர் செல்வாக்கு மிக்க வேந்தர் கரசன் என்பவரைத் த.வெ.க தலைமை இறுதி நேரத்தில் தேர்வு செய்துள்ளது. அம்ரிஷ் வேட்புமனுத் தாக்கல் செய்யாத நிலையில், வேந்தர் கரசனை த.வெ.க-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, வேட்புமனுத் தாக்கல் செய்யும் கடைசி நாள் வரை பி-ஃபார்ம் வழங்குவதில் கட்சித் தலைமைக்கு அதிகாரம் உள்ளது. எதிர்த்தரப்பு வேட்பாளர்களின் பலத்தை ஆராய்ந்து, கடைசி நேரத்தில் வியூகத்தை மாற்ற விஜய் இத்தகைய முடிவை எடுத்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
சில வேட்பாளர்களின் சொத்து விபரங்கள் அல்லது ஆவணங்களில் குளறுபடிகள் இருந்தால், மனு நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க இத்தகைய மாற்று வேட்பாளர்கள் அல்லது புதிய வேட்பாளர்கள் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதே சமயம், வேட்பாளர்கள் இருவரும் பின்வாங்கியதால், புதிய வேட்பாளர்களை களமிறக்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.