அதிர்ச்சி... கூவகம் கூத்தாண்டவர் சிலையில் 23 சவரன் நகைகள் திருட்டு... திருவிழா கூட்டத்தைப் பயன்படுத்தி கைவரிசை!

 

வருடந்தோறும் நடைபெறும் சித்திரைத் திருவிழா, கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் தற்போது களைகட்டத் துவங்கியுள்ளது.  உலகின் பல  பகுதிகளில் இருந்தும் இந்த திருவிழாவில் பக்தர்கள் வந்து குவிகின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருநங்கைகள் தாலி கட்டும் வைபவமும், தேரோட்டமும் நடைபெற உள்ள நிலையில், கோவிலில் வீற்றிருக்கும் கூத்தாண்டவர் சிலையில் மீதிருந்து 23 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவிழாவில் கலந்துக் கொள்ள ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குழுமியிருந்த நிலையில், கூட்டத்தைப் பயன்படுத்தி மர்ம நபர்கள் இந்த கைவரிசையைக் காட்டியுள்ளனர்.

நகைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள், உடனடியாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். திருவிழாவுக்காக ஆயிரக்கணக்கான திருநங்கைகளும் பக்தர்களும் குவிந்துள்ள நிலையில், இந்த திருட்டுச் சம்பவம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், கோவிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இந்த திருட்டுச் சம்பவத்தால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் திருநங்கைகளிடையே ஒருவித அச்சம் ஏற்பட்டுள்ளது. போலீசார் கோவில் வளாகத்தில் பாதுகாப்பைப் பலப்படுத்தியுள்ளதுடன், சந்தேகத்திற்கிடமான நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சித்திரைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வரும் வேளையில், இத்தகைய அசம்பாவிதம் நடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.