அதிர்ச்சி... விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீது இறைச்சி துண்டுகள் வீச்சு: 3 பேர் கைது!
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் மீது அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து இறைச்சி மற்றும் எலும்புத் துண்டுகள் வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், அதன் நிறைவாக விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
ஐதராபாத்தில் உள்ள மண்டனபேட் பகுதியில் நேற்று இரவு விநாயகர் சிலை ஊர்வலமாகச் சென்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து எதிர்பாராதவிதமாக விநாயகர் சிலை ஊர்வலத்தின் மீது இறைச்சி மற்றும் எலும்புத் துண்டுகள் வீசப்பட்டன.
இந்தச் செயலால் அதிர்ச்சியடைந்த பக்தர்கள் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்து விசாரணை நடத்திய காவல்துறையினர், அடுக்குமாடி குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து இறைச்சி மற்றும் எலும்புத் துண்டுகளை வீசிய இம்ரான் குரேஷி, அர்ஷியா பேகம் மற்றும் சபீனா ஆகிய 3 பேரை உடனடியாகக் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றத்தை ஏற்படுத்தியதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.