undefined

அதிர்ச்சி... மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 3 பேர் பலி; 75 பேர் காயம்!

 

சிங்கம்புணரி அருகே உள்ள அரளிப்பாறை பகுதியில் அரசு அனுமதியுடன் மஞ்சுவிரட்டு போட்டி இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் சிவகங்கை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து ஏராளமான காளைகளும், ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் கலந்துகொண்டனர். இதில் காளைகள் முட்டியதில் ராமநாதன் (23), மஞ்சுவிரட்டைப் பார்க்க வந்த சுந்தரராஜ் (48), வேடிக்கை பார்க்க வந்த அடையாளம் தெரியாத ஒருவர் என 3 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அரளிப்பாறையில் வாடிவாசல் வழியாகக் காளைகள் அவிழ்த்து விடப்படுவதற்கு முன்பாகவே, வயல்வெளிகள் மற்றும் திறந்தவெளிப் பகுதிகளில் காளை உரிமையாளர்கள் தங்களது காளைகளை ஆங்காங்கே அவிழ்த்து விட்டுள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட காளைகள் ஒரே நேரத்தில் சீறிப் பாய்ந்தபோது, அங்கிருந்த பார்வையாளர்களை முட்டித் தள்ளின. அந்த பகுதியில் கூட்ட நெரிசலில் சிக்கியவர்களையும், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் காளைகள் முட்டித் தூக்கி வீசின. இதில் சுமார் 75 பேர் காயமடைந்தனர்.

அரசு அனுமதியுடன் முறையான பாதுகாப்பு வசதிகளுடன் போட்டி ஒருபுறம் நடந்தாலும், வெளியார் பகுதிகளில் காளைகளை அவிழ்த்து விடுவதைக் கட்டுப்படுத்தத் தவறியதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்று வருகின்றனர்.