அதிர்ச்சி... பருத்தி காட்டில் மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் உயிரிழப்பு!
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பருத்தி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, திடீரென ஏற்பட்ட இடி-மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சீல்நாயக்கன்பட்டியை அடுத்த சூலப்புரத்தைச் சேர்ந்தவர் வாசியம்மாள். இவருக்குக் குன்னுவார்பட்டி பகுதியில் சொந்தமாக விவசாயத் தோட்டம் உள்ளது. இன்று இந்தத் தோட்டத்தில் பருத்தி எடுக்கும் பணிக்காக, வாசியம்மாள் மற்றும் அவரது உறவினர்களான ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி உட்பட அதே ஊரைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர்.
இன்று மாலை வேளையில் அந்தப் பகுதியில் திடீரென பலத்த மழை பெய்துள்ளது. இதனால் மழையிலிருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ள, தொழிலாளர்கள் அங்குள்ள ஒரு புளியமரத்தின் அடியில் ஒதுங்கியுள்ளனர். அப்போது, எதிர்பாராத விதமாக அந்தப் புளியமரத்தின் மீது பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில் மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராமுத்தாய், தனிக்கொடி, கணபதி ஆகிய மூன்று பெண்கள் மீதும் மின்னல் பாய்ந்ததில், அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தனர்.
இச்சம்பவத்தில் தோட்டத்தின் உரிமையாளரான வாசியம்மாள் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து குறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எழுமலை காவல் நிலையப் போலீசார், உயிரிழந்த மூன்று பெண்களின் உடல்களையும் மீட்டு உடற்கூறாய்விற்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விவசாயப் பணிக்காகச் சென்ற இடத்தில், மின்னல் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.