அதிர்ச்சி... அடினோ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி உயிரிழப்பு!
நெல்லை மேலப்பாளையத்தில் அடினோ வைரஸ் பாதிப்பால் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியைச் சேர்ந்த ரசூல் என்பவரின் மகள் பாத்திமா (4). இந்தச் சிறுமிக்குக் கடந்த சில நாட்களாகக் கடும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, நெல்லை பெருமாள்புரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 20 நாட்களுக்கும் மேலாகத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சையின் போது சிறுமியின் நுரையீரல் பகுதியில் பலத்த பாதிப்பு ஏற்பட்டிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதற்காகத் தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும், இன்று சிகிச்சை பலனின்றி சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
சிறுமி உயிரிழந்ததைத் தொடர்ந்து சுகாதாரத் துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன:
சிறுமியின் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியே அவருக்கு எதிராக மாறியது கண்டறியப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனை நடத்திய பரிசோதனை ஆவணங்களில், சிறுமிக்கு அடினோ வைரஸ் பாதிப்பு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமி இறந்ததற்கான துல்லியமான காரணம் மற்றும் உடலில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து விரிவான விளக்கம் அளிக்குமாறு தனியார் மருத்துவமனை நிர்வாகத்திற்குச் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே கோடை கால நோய்கள் பரவி வரும் நிலையில், அடினோ வைரஸ் பாதிப்பால் சிறுமி உயிரிழந்திருப்பது மேலப்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடையே பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளிடம் காய்ச்சல் அல்லது சுவாசப் பாதிப்புகள் இருந்தால் உடனடியாக அரசு மருத்துவமனைகளை அணுகுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.