அதிர்ச்சி.. அரசினர் சிறப்பு இல்லத்தின் சுவர் ஏறி குதித்து 5 சிறார் குற்றவாளிகள் தப்பியோட்டம்!
செங்கல்பட்டில் உள்ள அரசினர் கூர்நோக்கு மற்றும் சிறப்பு இல்லத்தில் இருந்து கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பயங்கரக் குற்ற வழக்குகளில் தொடர்புடைய 5 இளஞ்சிறார் குற்றவாளிகள் இன்று சுவரேறி குதித்துத் தப்பியோடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு நகரின் மையப்பகுதியில் அரசினர் கூர்நோக்கு மற்றும் சிறப்பு இல்லம் இயங்கி வருகிறது. இங்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை மற்றும் வழிப்பறி போன்ற கடுமையான குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் நீதிமன்றக் காவலில் தங்க வைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இங்குப் பாதுகாப்புப் பிரிவில் வைக்கப்பட்டிருந்த 5 சிறார்கள், இன்று அதிகாலை நேரத்தில் அங்குள்ள காவலாளர்களின் கண் அயர்ந்த நேரத்தைப் பயன்படுத்தித் திட்டமிட்டுத் தங்களது அறையிலிருந்து வெளியேறியுள்ளனர். பின்னர், வளாகத்தின் உயரமான பாதுகாப்புச் சுவரை வேகத்தில் ஏறி குதித்துத் தப்பியோடியுள்ளனர்.
காலை வழக்கமான கைதிகள் கணக்கெடுப்பின் போது 5 சிறார்கள் அறையில் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த இல்லக் கண்காணிப்பாளர், உடனடியாகச் செங்கல்பட்டு நகரக் காவல் நிலையத்திற்கு அவசரத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இல்லத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, அவர்கள் எந்த திசையை நோக்கித் தப்பிச் சென்றார்கள் என்பதைத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். தப்பியோடிய 5 சிறார்களைப் போர்க்கால அடிப்படையில் மீண்டும் பிடிப்பதற்காகச் செங்கல்பட்டு மாவட்ட எல்லைகள் முழுவதும் தற்போது போலீசாரால் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டுள்ளது.