அதிர்ச்சி... மின்விசிறி அறுந்து விழுந்ததில் 5 மாதக் குழந்தை பலியான துயரம்!

 

கேரள மாநிலம் மலப்புரம் பகுதியில் மின்விசிறியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாகத் தீப்பிடித்துத் தொட்டிலின் மீது விழுந்த விபத்தில், 5 மாதக் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் மலப்புரம் மாவட்டம் கோலக்கட்டிரி பகுதியைச் சேர்ந்தவர் சஜீவ். இவரது 5 மாதப் பெண் குழந்தை ஸ்ரீபத்ரா, வீட்டில் உள்ள தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு இயங்கிக் கொண்டிருந்த மின்விசிறியில் திடீரென மின்கசிவு ஏற்பட்டுத் தீப்பிடித்துள்ளது.

தீப்பிடித்த மின்விசிறி திடீரென அறுந்து குழந்தை தூங்கிக் கொண்டிருந்த தொட்டிலின் மீது விழுந்தது. இதனால் மளமளவெனப் பரவிய தீயில் குழந்தைக் கிடந்த மெத்தையும் கட்டிலும் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின.

பெற்றோர் வேலை நிமித்தம் வெளியே சென்றிருந்த வேளையில், குழந்தை பாட்டியின் பாதுகாப்பில் வீட்டின் உள்ளே இருந்த போதே இந்த எதிர்பாராத விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்து நடந்தவுடன் குடும்பத்தினரும் அக்கம் பக்கத்தினரும் உடனடியாகக் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். எனினும், தீக்காயங்கள் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிர் இழந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.