பெரும் அதிர்ச்சி... 5 நாட்களிலேயே உருகிய அமர்நாத் பனி லிங்கம்; ஆய்வு நடத்தக் கோரிக்கை!

 

ஜம்மு-காஷ்மீர் இமயமலைப் பகுதியில் புகழ்பெற்ற அமர்நாத் யாத்திரை தொடங்கி ஐந்தே நாட்களுக்குள், குகைக்குள் இயற்கையாக உருவாகும் புனித பனி லிங்கம் 90 சதவீதம் உருகி மறைந்திருப்பது நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான சிவபக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூலை 3-ம் தேதி தான் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.  உலகளாவிய பருவநிலை மாற்றம் காரணமாக இமயமலைப் பிராந்தியத்தில் நடப்பு கோடைக் காலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தினசரிப் பக்தர்களின் வருகைக் கட்டுப்பாட்டு விதிகளை மீறி, நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குகைப் பகுதியில் குவிந்து வருகின்றனர். இவ்வளவு அதிகமான மனித நடமாட்டத்தால் ஏற்படும் உடல் வெப்பம் மற்றும் குகைக்குள் நிலவும் காந்தப்புல மாற்றம் பனி உருகுதலை வேகப்படுத்தியுள்ளது.

அமர்நாத் குகைப் பாதையை ஒட்டி அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்கப் பணிகள் மற்றும் கனரக எந்திரங்களின் பயன்பாடு காரணமாக அந்தப் பகுதியின் ஒட்டுமொத்தச் சூழலியல் சமநிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

யாத்திரை தொடங்கி முதல் வாரத்திற்குள்ளேயே பனி லிங்கம் முற்றிலும் கரையும் நிலைக்குச் சென்றுவிட்டதால், இந்த விவகாரத்தில் மத்திய அரசும் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகமும் உடனடியாகத் தலையிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

பனி லிங்கம் இவ்வளவு வேகமாக உருகுவதற்குப் பின்னால் உள்ள சூழலியல் ஆபத்துகள் குறித்து இந்தியப் புவியியல் ஆய்வுத் துறை மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளைக் கொண்டு உடனடியாக ஒரு விரிவான அறிவியல் பூர்வ ஆய்வு  நடத்தப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.

பனி லிங்கம் உருகினாலும் குகை வழிபாட்டிற்காக நாடு முழுவதிலும் இருந்து ஜம்மு நோக்கி வரும் பக்தர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இதனால், அமர்நாத் யாத்திரைக்கான முக்கியப் பேஸ் கேம்ப்களான பால்டால்  மற்றும் பஹல்காம் ஆகிய வழித்தடங்களில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கவும், அசம்பாவிதங்களைத் தடுக்கவும் ஜம்மு-காஷ்மீர் போலீசார், மத்தியப் பாதுகாப்புப் படையினர் மற்றும் இந்திய ராணுவத்தினர் இணைந்து முப்படைப் பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

உச்ச நீதிமன்ற விதிமுறைகளின்படி, குகைக்குள் செல்லும் பக்தர்களின் எண்ணிக்கையை முறைப்படுத்தவும், கூட்ட நெரிசல்களைக் கட்டுப்படுத்தவும் நுழைவாயில்களில் போலீசார் தங்களது சோதனைகளைக் கடுமையாக்கியுள்ளனர். பனிச்சரிவு மற்றும் இயற்கைச் சீற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால், முக்கியப் மலைப் பாதைகளில் போக்குவரத்துப் பிரிவு போலீசார் வாகனங்களைச் சீரான இடைவெளியில் இயக்கி வருகின்றனர்.