அதிர்ச்சி... வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 11 மாதக் குழந்தை மின்சாரம் தாக்கி பலி!

 

தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த 11 மாதக் குழந்தை நீரேற்றும் மின் மோட்டார் பட்டு மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபாகரன் - பாஸ்டினா தம்பதியரின் 11 மாதக் குழந்தையான மகிழன், தாயாருடன் திரேஸ்புரம் தீர்த்தக்கரை பிள்ளையார் கோவில் அருகில் உள்ள பாட்டியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வீட்டின் முன்புறம் குழந்தை விளையாடிக்கொண்டிருந்தான்.

அப்போது எதிர்பாராதவிதமாக அங்கு இயங்கிக் கொண்டிருந்த நீரேற்றும் மின் மோட்டாரைக் குழந்தை தொட்டுள்ளான். இதில் பலத்த மின்சாரம் தாக்கித் தூக்கி வீசப்பட்ட குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த குடும்பத்தினர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்குச் குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இந்தத் சோகச் சம்பவம் குறித்துத் தூத்துக்குடி வடபாகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.