அதிர்ச்சி... பாம்பு கடித்த சிறுவன் கங்கையில் மூழ்கடித்து உயிரிழப்பு... சாமியாரின் பேச்சைக் கேட்டுப் பெற்றோரே செய்த விபரீதம்!

 

அறிவியல் வளர்ந்த இந்த நூற்றாண்டிலும், மூடநம்பிக்கை ஒரு உயிரைப் பறித்துள்ள அதிர்ச்சிச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது. பாம்பு கடித்த சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல், சாமியார் சொன்னதைக் கேட்டு கங்கை நதியில் மூழ்க வைத்ததால் அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் ஒருவனை கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாம்பு கடித்தது. உடனடியாகச் சிறுவனை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விஷமுறிவு சிகிச்சை அளித்திருக்க வேண்டும். ஆனால், அவனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஒரு சாமியாரை நாடிச் சென்றுள்ளனர்.

அந்தச் சாமியார், "சிறுவனை கங்கை நதியில் நீண்ட நேரம் மூழ்க வைத்தால் விஷம் இறங்கிவிடும்" என்று ஒரு அபத்தமான ஆலோசனையை வழங்கியுள்ளார். இதனை அப்படியே நம்பிய பெற்றோர், சிறுவனை கங்கை நதிக்கரைக்குக் கொண்டு சென்றனர். அங்கு சுமார் 12 மணி நேரம் அந்தச் சிறுவனை தண்ணீருக்குள்ளேயே மூழ்க வைத்திருக்கின்றனர். ஏற்கனவே பாம்பு விஷம் உடலில் ஏறியிருந்த நிலையில், 12 மணி நேரம் தண்ணீரில் நனைந்ததால் சிறுவனின் உடல்நிலை மோசமடைந்தது.

இறுதியில், முறையான சிகிச்சை கிடைக்காமலும், தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறியும் அந்த 14 வயது சிறுவன் அங்கேயே உயிரிழந்தான்.

சிறுவன் உயிரிழந்த பின்னரே தாங்கள் செய்த தவறை உணர்ந்த பெற்றோர், அவனது உடலைப் பிடித்துக்கொண்டு கதறி அழுதது காண்போரை நெகிழச் செய்தது. ஒருவேளை சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் சென்றிருந்தால், அந்தச் சிறுவன் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

பாம்பு கடித்தால் எந்தச் சூழ்நிலையிலும் சாமியார்கள் அல்லது மந்திரவாதிகளை நம்பி நேரத்தை வீணடிக்கக் கூடாது என மருத்துவர்கள் மீண்டும் மீண்டும் எச்சரிக்கின்றனர். பாம்பு கடித்தால் உடனடியாக அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும். காயம்பட்ட இடத்தைச் சோப்புப் போட்டுச் சுத்தமாகக் கழுவி, அசையாமல் வைத்திருக்க வேண்டும். விஷமுறிவு மருந்துகள் மட்டுமே உயிரைக் காப்பாற்றும் ஒரே வழி. மூடநம்பிக்கையால் ஒரு பிஞ்சு உயிர் பறிபோன இந்தச் சம்பவம், கிராமப்புறங்களில் நிலவும் விழிப்புணர்வு இன்மையை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியுள்ளது.