undefined

அதிர்ச்சி... தூங்கிக் கொண்டிருந்த சகோதரர்கள் மீது பெட்ரோல் ஊற்றி எரிப்பு - தம்பி பலி!

 

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அண்ணன், தம்பி இருவர் மீது பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட கொடூர சம்பவத்தில், சிகிச்சை பலனின்றி தம்பி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். பெரியகுளம் தென்கரை பகுதியில் அரங்கேறியுள்ள இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை, T.கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர் அய்யனார் (26). இவர் நேற்று இரவு தனது அண்ணன் ராஜபாண்டி (30) என்பவருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் அதிகாலை சுமார் 3 மணி அளவில், இவர்களது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், தூங்கிக் கொண்டிருந்த அண்ணன், தம்பி இருவர் மீதும் பெட்ரோல் ஊற்றித் தீ வைத்துள்ளனர். பெட்ரோல் ஊற்றித் தீ வைத்ததோடு மட்டுமின்றி, அந்த இளைஞர்கள் வெளியே வந்துவிடக் கூடாது என்பதற்காக வீட்டின் கதவை வெளிப்பக்கமாகத் தாளிட்டுவிட்டு மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இளைஞர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி சென்ற அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று தீயை அணைத்து இருவரையும் மீட்டனர்.

பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட இருவரும் முதலில் பெரியகுளம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல் சிகிச்சைக்காகத் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அய்யனார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது அண்ணன் ராஜபாண்டி தொடர்ந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தக் கொடூரச் சம்பவம் தொடர்பாகத் தென்கரை போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த கண்ணன் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. தப்பியோடிய கண்ணனைப் பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்தச் சம்பவம் நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்துப் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.