அதிர்ச்சி சிசிடிவி வீடியோ... பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து 3ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் உயிரிழப்பு!

 

டெல்லி மயூர் விகார் பகுதியில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளியில், விளையாட்டுப் பயிற்சிக்குப் பிறகு வகுப்பறைக்குச் சென்ற 9 வயது சிறுமி திடீரென மயங்கி விழுந்து மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தலைநகரில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி மயூர் விகார் பகுதியில் உள்ள தனியார் ஒன்றில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயதான சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.  பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த விளையாட்டுப் பயிற்சியில் பங்கேற்று முடித்த சிறுமி, பின்னர் தனது வகுப்பறைக்குத் திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக வகுப்பறையிலேயே சிறுமி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.

allowfullscreen

சிறுமி கீழே விழுந்த அதிர்ச்சியில் அவரது தாடைப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோதிலும், சிறுமியைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த சிறுமியின் குடும்பத்தினர் மற்றும் பெற்றோர் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். பள்ளி நிர்வாகத்தின் மீது பல கேள்விகளை முன்வைத்துள்ள அவர்கள்:

சிறுமி மயங்கி விழுந்த உடனடியாக அவசியமான முதலுதவி வழங்கப்பட்டதா? அவசரக் காலங்களில் உயிரைக் காப்பாற்ற உதவும் 'சி.பி.ஆர்' சிகிச்சை அவருக்கு முறையாக அளிக்கப்படவில்லையா? மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் காலதாமதம் ஏற்பட்டதா? என்று கேள்வி எழுப்பி, பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே உயிரிழப்பிற்கு காரணமாக இருக்கலாம் எனக் குற்றம் சாட்டியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள டெல்லி காவல்துறையினர், சம்பவத்தன்று பள்ளியில் என்ன நடந்தது என்பதை துல்லியமாகக் கண்டறியப் பள்ளியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளைக் கைப்பற்றித் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

விளையாட்டுப் பயிற்சியின் போது சிறுமிக்கு ஏதேனும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதா அல்லது வகுப்பறையில் நடந்த நிகழ்வுகள் என்ன என்பது குறித்துப் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளிச் சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த இந்தச் சம்பவம் பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே பெரும் கவலையை உருவாக்கியுள்ளது.