அதிர்ச்சி... சிஐஎஸ்எப் வீரர்களுக்கிடையே தகராறு... துப்பாக்கிச்சூட்டில் துணை கமாண்டர் உட்பட 4 பேர் பலி - ஜம்மு-காஷ்மீரில் கொடூரம்!
ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் உள்ள பசோலி பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை வீரர்களிடையே ஏற்பட்ட தகராறில், சக வீரர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயர் அதிகாரி உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டம் பசோலி பகுதியில் உள்ள சிஐஎஸ்எப் முாமில் இந்தக் கொடூரச் சம்பவம் அரங்கேறியுள்ளது. பணியில் இருந்த போது வீரர்களிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், தலைமை காவலர் அவதேஷ் குமார் தனது ஏ.கே.47 துப்பாக்கியால் சக வீரர்கள் மீது சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.
இந்தத் தாக்குதலில் துணை கமாண்டர் அங்கித் குமார் பாண்டே, சப்-இன்ஸ்பெக்டர் லஷ்மண் சிங் மற்றும் காவலர்கள் ரபீக் அகமது, சந்தீப் குமார் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சக வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தலைமை காவலர் அவதேஷ் குமாரை உடனடியாகக் கைது செய்து சக பாதுகாப்புப் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.