அதிர்ச்சி... பிரபல தனியார் பள்ளி விடுதி அறையில் 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை!
காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கிப் படித்து வந்த 11-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் 16 வயது மகள் பாலரக்ஷனா, காஞ்சிபுரம் அருகே ஒரிக்கை பகுதியில் அமைந்துள்ள ஒரு பிரபல தனியார் பள்ளியின் விடுதியில் தங்கி 11-ஆம் வகுப்பு படித்து வந்தார். வழக்கம் போல் காலையில் மாணவி பாலரக்ஷனா தனது அறையிலிருந்து வெளியே வராததால் சந்தேகமடைந்த சக மாணவிகளும் விடுதி ஊழியர்களும் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர்.
அப்போது மாணவி மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினர், மாணவியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகக் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவியின் இந்த முடிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவி பயன்படுத்திய செல்போனைக் கைப்பற்றியுள்ள காவல்துறையினர், அவருக்கு யாரேனும் நெருக்கடி கொடுத்தனரா? அல்லது கடைசியாக அவர் யாருடன் பேசினார்? என்பது உள்ளிட்ட பல கோணங்களில் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.