அதிர்ச்சி.. பட்டப்பகலில் பஸ் ஸ்டாண்டில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை!
சென்னை மயிலாப்பூர் பகுதியில் பட்டப்பகலில் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த கல்லூரி மாணவியிடம் அநாகரிகமாக நடந்துக் கொண்டு, பாலியல் தொல்லை கொடுத்த நபரை மயிலாப்பூர் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையைச் சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவி ஒருவர், நேற்று மயிலாப்பூர் சாந்தோம் பேருந்து நிறுத்தத்தில் தனது தோழியுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், அந்த மாணவியிடம் திடீரென மிகவும் ஆபாசமாகப் பேசி, அவருக்குப் பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து அத்துமீறியுள்ளார்.
அந்த நபரின் அநாகரீகச் செயலால் அதிர்ச்சியடைந்த மாணவி, உடனடியாகப் பயத்தில் கூச்சலிட்டுள்ளார். மாணவியின் சத்தம் கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் திரண்டு வருவதைக் கண்ட அந்த நபர், அந்த மாணவிக்குக் கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றார்.
இச்சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட மாணவி மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து, பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு கடுமையான பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்தப் பேருந்து நிறுத்தத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளைத் தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட நபர் அடையாளம் காணப்பட்டார். விசாரணையில், அவர் பட்டினம்பாக்கம், ஆர்.ஏ.புரம் பகுதியைச் சேர்ந்த 39 வயதான மதன் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து போலீசார் மதனின் இருப்பிடத்தை முற்றுகையிட்டு அவரை அதிரடியாகக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மதனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் குற்றத்தைச் செய்தது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் நீதிமன்ற உத்தரவின்படி மதன் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த சென்னை மயிலாப்பூர் பகுதியில் கல்லூரி மாணவிக்கு நேர்ந்த இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், புகாரளித்த சில மணி நேரங்களிலேயே கண்காணிப்பு கேமரா மூலம் குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்த போலீசாருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.