அதிர்ச்சி... அரசுப் பள்ளியில் 5க்கும் மேற்பட்ட மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை - கம்ப்யூட்டர் ஆசிரியர் கைது!

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில், பயின்று வரும் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் கணினி ஆசிரியர் சுரேஷ் என்பவரைக் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

கல்வராயன்மலை பகுதியில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியில் கணினி ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தவர் சுரேஷ். இவர் பள்ளி மாணவிகளிடம் தவறான முறையில் நடந்து கொண்டு, பாலியல் ரீதியாகத் தொல்லை கொடுத்து வந்ததாகப் பாதிக்கப்பட்ட மாணவிகள் மற்றும் பெற்றோர் தரப்பில் பள்ளி நிர்வாகத்திடமும், காவல் துறையிடமும் முறைப்படி புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, கணினி ஆசிரியர் சுரேஷை நேற்று கைது செய்தனர். காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையின்படி, இந்த உறைவிடப் பள்ளியில் தங்கிப் படிக்கும் 5-க்கும் மேற்பட்ட மாணவிகள் இந்த ஆசிரியரால் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் சுரேஷிடம் இச்சம்பவத்தின் பின்னணி குறித்தும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பள்ளி வளாகத்திலேயே மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட விவகாரம் கள்ளக்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பையும், பெற்றோர் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.