அதிர்ச்சி... 3 பேரை அரிவாளால் வெட்டிவிட்டு, திமுக கவுன்சிலர் மகன் காவல்நிலையத்தில் சரண்!
மயிலாடுதுறை அருகே உள்ள அறுபத்துமூவர் பேட்டை பகுதியில், குடிநீர் பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு மற்றும் நிலுவையில் இருந்த முன்விரோதம் காரணமாகப் பெண் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்தாக்குதலில் ஈடுபட்ட ஆளுங்கட்சி பிரமுகரின் மகன் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
மயிலாடுதுறை அறுபத்துமூவர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கற்பகம். இவர் இன்று வழக்கம் போலத் தனது வீட்டின் அருகே உள்ள பொதுக் குழாயில் குடிநீர் பிடித்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, கற்பகத்தின் எதிர்வீட்டில் வசிக்கும் உள்ளூர் திமுக பெண் கவுன்சிலரின் மகனான அசோக் என்பவருக்கும், கற்பகத்திற்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த அசோக், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கற்பகத்தை ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டியுள்ளார்.
கற்பகத்தின் அலறல் சத்தம் கேட்டு, அவரைக் காப்பாற்ற ஓடிவந்த அவரது கணவர் செல்வம் மற்றும் மகன் கவியரசன் ஆகியோரையும் அசோக் அரிவாளால் வெட்டித் தாக்கியுள்ளார். இதில் மூன்று பேருக்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு பலத்த காயமடைந்தனர். தாக்குதலைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பொதுமக்கள் கூடத் தொடங்கியதால், அசோக் அங்கிருந்து தப்பியோடி நேராக மயிலாடுதுறை காவல் நிலையத்திற்குச் சென்றார்.
காவல் நிலையத்தில் சரணடைந்த அசோக், தன் மீதான வழக்கில் இருந்து தப்பிப்பதற்காகத் தற்காப்புப் புகாரை அளித்துள்ளார். கற்பகம் குடும்பத்தினர் தான் தன்னை முதலில் கத்தியால் வெட்டியதாகவும், அதனால்தான் தான் திருப்பித் தாக்கியதாகவும் கூறி போலீசாரிடம் சரணடைந்துள்ளார். அரிவாள் வெட்டில் காயமடைந்த கற்பகம், செல்வம் மற்றும் கவியரசன் ஆகிய மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு, அவசரச் சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் குறித்து மயிலாடுதுறை நகரப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். ஆளுங்கட்சி திமுக கவுன்சிலரின் மகன் சம்பந்தப்பட்டுள்ள இந்த வன்முறை விவகாரத்தில் எவ்வித அரசியல் தலையீடும் இன்றி நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.