அதிர்ச்சி... 3 பெண் குழந்தைகளை ஏரியில் தள்ளிக் கொன்ற தந்தை.. கடத்தப்பட்டதாக நாடகமாடியது அம்பலம்!
தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில், தந்தை ஒருவரே தனது மூன்று பெண் குழந்தைகளை ஏரியில் வீசிக் கொலை செய்த கொடூரமான சம்பவம் பயங்கர அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
காமரெட்டி மாவட்டத்தின் ஆர்.பி. நகர் பகுதியைச் சேர்ந்த இஸ்மாயில் என்ற ஆட்டோ ஓட்டுநர், தனது சொந்தக் குழந்தைகளையே கொலை செய்த குற்றத்திற்காகக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை மார்ச் 7ம் தேதி முதல் இஸ்மாயிலின் மகள்களான ஷீபத் (8), அயாத் (7) மற்றும் மரியம் (5) ஆகிய மூன்று சிறுமிகளும் காணாமல் போயினர். குழந்தைகளைத் தேடிய உறவினர்கள், எங்கு தேடிப் பார்த்தும் குழந்தைகள் கிடைக்காததால் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆரம்பத்தில் குழந்தைகளை யாரோ கடத்திச் சென்று விட்டதாக இஸ்மாயில் நாடகமாடினார். ஆனால் அவரது மனைவி ஷபீனாவுக்குத் தனது கணவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இஸ்மாயில் குழந்தைகளை ஆட்டோவில் அழைத்துச் சென்றதை அவர் உறுதிபடக் கூறினார்.
காவல்துறையினர் இஸ்மாயிலை அழைத்துத் தங்கள் பாணியில் விசாரணை நடத்தியபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார். தமக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும், மூன்று பெண் குழந்தைகளை வளர்ப்பது தமக்கு பாரமாகத் தெரிந்ததாலும் அவர்களைக் கொலை செய்ய முடிவெடுத்ததாகத் தெரிவித்தார்.
போலீசாரின் விசாரணையில் குழந்தைகளை ஆட்டோவில் அழைத்துச் சென்று காமரெட்டி பகுதியில் உள்ள ஒரு பெரிய ஏரியில் வீசியதாக இஸ்மாயில் கூறியுள்ளார். குழந்தைகள் உயிரிழக்கும் வரை சுமார் அரை மணி நேரம் அந்த ஏரியின் கரையில் நின்றே வேடிக்கை பார்த்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தற்போது அந்த ஏரியில் இருந்து மூன்று சிறுமிகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. உலக மகளிர் தினத்தை ஒட்டி நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடந்து வரும் வேளையில், தந்தை ஒருவரே தனது 3 மகள்களையும் கொலை செய்துள்ள இந்தச் சம்பவம் தெலங்கானாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.