ஆய்வில் அதிர்ச்சி... இந்தியாவில் 3.86 கோடி பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதே தெரியாது!
இந்தியாவில் நீரிழிவு நோயால் (சர்க்கரை நோய்) பாதிக்கப்பட்டுள்ள சுமார் 8 கோடியே 98 லட்சம் பேரில், 3 கோடியே 86 லட்சம் பேருக்கு (43 சதவீதம்) தங்களுக்கு அந்நோய் இருப்பதே தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர் என்ற அதிர்ச்சித் தகவல் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு நடத்திய புதிய ஆய்வில் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் சர்க்கரை நோய் பாதிப்பு வேகமாக அதிகரித்து வரும் நிலையில், நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது தொடர்பாக இந்தியாவில் 25 முதல் 64 வயதுக்கு உட்பட்ட 502 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியா மட்டுமின்றி பிரேசில், சீனா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மொத்த நீரிழிவு நோயாளிகளில் 43 சதவீதம் பேருக்குத் தங்களது பாதிப்பு குறித்த விழிப்புணர்வு இல்லை. நோய் இருப்பது தெரியாமல் இருப்பதால், உரிய நேரத்தில் சிகிச்சை தொடங்க முடியாமல் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட இதர உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது.
தங்களுக்கு நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் இருப்பதை 84 சதவீதம் பேர் உணர்ந்திருந்தாலும், அதனை உறுதி செய்து கொள்வதற்கான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ள மாட்டோம் என்று ஆய்வில் பங்கேற்றவர்களில் 48 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
நீரிழிவு நோய் மற்றும் அதன் அறிகுறிகள் குறித்துப் பொதுமக்களிடையே பல தவறான புரிதல்கள் நிலவுவதையும் இந்த ஆய்வு வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. 2-ஆம் வகை நீரிழிவு நோய் வயதானவர்களுக்கு மட்டுமே ஏற்படும் என்று 14 சதவீதம் பேர் தவறாக நம்புகின்றனர்.
இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால் அதற்கான வெளிப்படையான அறிகுறிகள் தெரியும் என்று 75 சதவீதம் பேர் கருதுகின்றனர். ஆனால், நீரிழிவு நோய் உள்ள பலருக்கு ஆரம்ப நிலையில் எவ்வித வெளிப்படையான அறிகுறிகளும் இல்லாமல் இருக்கலாம் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்தது 80 சதவீதம் பேருக்கு நோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்க வேண்டும் என்ற இலக்கைச் சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு நிர்ணயித்துள்ளது. இதனை எட்ட, பொதுமக்கள் தயக்கமின்றித் தொடர்ச்சியாக இரத்தச் சர்க்கரைப் பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகும்.