அதிர்ச்சி... நின்றுக் கொண்டிருந்த காரில் இளம்பெண்ணின் சடலம் அழுகிய நிலையில் மீட்பு!

 

மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மெக்கானிக் ஷெட்டில் பழுதுபார்ப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த காரின் உள்ளே இருந்து, அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாநகரக் காவல் எல்லைக்குட்பட்ட சுப்பிரமணியபுரம் பகுதியில் விசித்திரமான மற்றும் சந்தேகத்திற்கிடமான மரணச் சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பழுதுபார்ப்பிற்காகக் கடந்த சில நாட்களாக மூடி வைக்கப்பட்டிருந்த காரின் உட்புறத்தில் இருந்து ஒரு பெண்ணின் உடல் துர்நாற்றத்துடன் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்துப் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

காவல் துறை மற்றும் உள்ளூர் மக்கள் தரப்பில் திரட்டப்பட்ட முதற்கட்டத் தகவல்களின்படி, ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பகுதியைச் சேர்ந்தவர் பூவலிங்கம். இவர் தமக்குச் சொந்தமான காரை பழுது பார்ப்பதற்காக , மதுரை பழங்காநத்தம் வெங்கடாசலபுரம் பகுதியில் அமைந்துள்ள ஒரு மெக்கானிக் ஷெட்டில் கடந்த வாரம் கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்.

காரை பழுதுநீக்குவதற்குத் தேவையான சில முக்கிய உதிரிபாகங்கள் உடனடியாகக் கிடைக்காததால், மெக்கானிக் ஷெட்டிலேயே கார் 4 நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் பிறகு பூவலிங்கம் உதிரிபாகங்களை வாங்கி வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று இரவோடு இரவாகக் காரை பழுதுபார்ப்பதற்கான பூர்வாங்க வேலைகளைத் தொடங்குவதற்காகக் காரின் அருகே மெக்கானிக் மற்றும் உரிமையாளர் சென்றுள்ளனர். அப்போது காரில் இருந்து பயங்கரமான துர்நாற்றம் வீசியுள்ளது.

காரின் கதவைத் திறந்து உள்ளே பார்த்தபோது, அதன் உட்புறத்தில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் உடல் முற்றிலும் அழுகிய நிலையில் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுப்பிரமணியபுரம் காவல் நிலையப் போலீசார், காரில் இருந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கார் நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில், அந்தப் பெண் எவ்வாறு காரின் உள்ளே சென்றார்? அவர் தவறுதலாகக் காரின் உள்ளே சென்று கதவு லாக் ஆகி மூச்சுத்திணறி இறந்தாரா அல்லது யாரேனும் அவரைக் கொலை செய்து காரின் உள்ளே உடலை வீசிச் சென்றார்களா என்ற கோணங்களில் போலீசார் தங்களது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

மெக்கானிக் ஷெட் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளைப் பறிமுதல் செய்து, கடந்த 4 நாட்களில் காரின் அருகே யாரேனும் நடமாடினார்களா எனச் சுப்பிரமணியபுரம் போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.