ஆய்வறிக்கையில் அதிர்ச்சி... நாடு முழுவதும் பள்ளி இடைநிற்றலில் 9,10-ம் வகுப்பு மாணவிகளே அதிகம்!
இந்தியாவில் ஆரம்பப் பள்ளிகளில் மாணவிகளின் சேர்க்கை திருப்திகரமாக இருந்தாலும், 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளுக்கு வரும்போது மாணவிகள் அதிகளவில் பள்ளியை விட்டு விலகும் கசப்பான உண்மை மத்திய அரசின் தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.
மக்களவையில் எம்பி குர்மீத் சிங் மீத் ஹேயர் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணை அமைச்சர் ஜெயந்த் சவுத்ரி தாக்கல் செய்த 'யு.டி.ஐ.எஸ்.இ தரவுகளின்படி: மேல்நிலைப் பள்ளி அளவிலான மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் கடந்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைந்துள்ளது. 2023-24-இல் 12.6% ஆகவும், 2024-25-இல் 9.6% ஆகவும் இருந்த இடைநிற்றல் விகிதம், 2025-26-இல் 8% ஆகக் குறைந்துள்ளது.
ஆரம்பப் பள்ளி (1-5): 0.1% , நடுநிலைப் பள்ளி (6-8): 3.4%, உயர்நிலைப் பள்ளி (9-10): 8%. வரலாற்றுச் அளவில் குறைந்திருந்த போதிலும், ஆரம்பப் பள்ளியை விட உயர்நிலைப் பள்ளியில் மாணவிகள் இடைநிற்கும் விகிதம் கிட்டத்தட்ட 80 மடங்கு அதிகமாக உள்ளது.
2023-24-ஆம் ஆண்டின் 'அமைப்பார்ந்த உழைப்பாளர் சக்தி ஆய்வின்' அடிப்படையில், மாணவிகள் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் பருவம் அடையும் வயதை எட்டும்போது பள்ளி செல்வதைத் தவிர்ப்பதற்கான காரணங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன:
குடும்ப வருமானத்தைப் பெருக்க வேலைக்குச் செல்ல நிர்பந்திக்கப்படுவது. வீட்டில் உள்ள பராமரிப்பு மற்றும் சமையல் உள்ளிட்ட வேலைகளைப் பார்க்கும் பொறுப்பு. பெண் குழந்தைகளுக்கு உயர்கல்வி தேவையில்லை எனப் பெற்றோர் கருதுவது. பள்ளிகளுக்கான தூரம், பயணத்தின் போது ஏற்படும் பாதுகாப்பு அச்சங்கள் மற்றும் பாலப்பருவத் திருமணம்.
உயர்நிலைப் பள்ளி அளவில் அதிகபட்சமாக லடாக் யூனியன் பிரதேசத்தில் 15.6% மாணவிகள் இடைநிற்கின்றனர், அசாம் & கர்நாடகா: தலா 13.9%, குஜராத்: 13.3%, அருணாச்சலப் பிரதேசம் & நாகாலாந்து: தலா 12.4%
பள்ளிக் கழிப்பறைகள் தொடர்பான தரவுகளின்படி, இந்தியாவில் உள்ள 9.5 லட்சத்திற்கும் அதிகமான அரசுப் பள்ளிகளில் 95.4% பள்ளிகளில் மாணவிகளுக்கு எனத் தனியாக இயங்கக்கூடிய கழிப்பறை வசதிகள் உள்ளன. டெல்லி, கோவா, சண்டிகர் ஆகியவை 100% கழிப்பறை வசதியைப் பெற்றுள்ள நிலையில், அருணாச்சலப் பிரதேசம் (67.9%), மிசோரம் (72.7%) ஆகிய மாநிலங்கள் பின்தங்கியுள்ளன. கழிப்பறை வசதிக்கும் இடைநிற்றலுக்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக எந்தவொரு ஆய்வும் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், 'சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் சானிட்டரி பேட் வழங்கும் இயந்திரங்கள் நிறுவப்படுகின்றன. சுகாதார அமைச்சகம் சார்பில் மாதந்தோறும் 53.9 லட்சம் வளர்இளம் பருவச் சிறுமிகளுக்குச் சானிட்டரி நாப்கின்கள் வழங்கி விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.