ஆய்வில் அதிர்ச்சி... தரமற்றவை, பாதுகாப்பு குறைபாடு... பிரான்ஸில் 3 லட்சம் தரமற்ற ஆணுறைகளைத் திரும்பப் பெற அரசு உத்தரவு!

 

பிரான்ஸ் நாட்டில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த சுமார் 3 லட்சம் ஆணுறைகளில் பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டதை அடுத்து, அவற்றை உடனடியாகச் சந்தையிலிருந்து திரும்பப் பெறவும், விற்பனைக்குத் தடை விதிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. பிரான்ஸ் நாட்டின் நுகர்வோர் மோசடி தடுப்பு இயக்ககம் மற்றும் சுகாதார இயக்ககம் இணைந்து நடத்திய ஆய்வகச் சோதனையில் இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட சில ஆணுறைகளில் நுண் துளைகள் இருப்பதும், பயன்பாட்டின் போது அவை எளிதில் வெடிக்கும் அபாயம் கொண்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. மருந்தகங்கள் மற்றும் சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்து சுமார் 2,60,000 ஆணுறைகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தின் முறைப்படியான பாதுகாப்பு முத்திரை இல்லாமலும், பிரெஞ்சு மொழி லேபிள் இல்லாமலும் இணையதளங்கள் மூலம் விற்கப்பட்ட 30 வகையிலான 40,000-க்கும் மேற்பட்ட ஆணுறைகளின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஜப்பானின் முன்னணி நிறுவனமான ஒகாமோட்டோ மற்றும் பிரான்ஸ் பிராண்டுகளான மை லூபி, பிரைடே பே  உள்ளிட்ட குறிப்பிட்ட தயாரிப்புகளுக்கு இந்தத் தடை பொருந்தும். தடை செய்யப்பட்ட இந்தத் தரமற்ற ஆணுறைகளைப் பயன்படுத்தியவர்களுக்குத் தேவையான மருத்துவ ஆலோசனைகளை பிரான்ஸ் சுகாதாரத் துறை வழங்கியுள்ளது.

பாலினப் பரவல் தொற்றுகள் மற்றும் எச்.ஐ.வி பாதிப்புகள் குறித்து உடனடியாக மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தவிர்க்கவும், மாதவிடாய் தாமதமானால் உரியக் கர்ப்பப் பரிசோதனை செய்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். கூடுதல் விவரங்களை அறியவும், திரும்பப் பெறப்பட்ட தயாரிப்புகளின் பட்டியலைச் சரிபார்க்கவும் பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வத் தளத்தைப் பார்வையிடலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.