அதிர்ச்சி... ஓட்டுப்போட பெட்டி பெட்டியாக மது பாட்டில்கள்!

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று ஏப்ரல் 23 விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்தின் கிள்ளியூர் தொகுதியில் வாக்காளர்களுக்கு மதுபானம் விநியோகம் செய்யப்படுவதாக எழுந்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்தத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார், தேர்தல் தோல்வி பயத்தில் வாக்காளர்களைத் திசைதிருப்ப மூட்டை மூட்டையாக மதுபானத்தை விநியோகித்து வருவதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஹிம்லர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தலையொட்டி மதுக்கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இப்படிப் பெட்டி பெட்டியாக மது சப்ளை செய்யப்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதேபோல் திருச்சி மாவட்டம் முசிறி பகுதியிலும் தேர்தல் விதிமுறைகளை மீறி கள்ளச் சந்தையில் மதுபானம் விற்பனை செய்த நபர் ஒருவரைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஏராளமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நேரத்தில் இதுபோன்ற முறைகேடுகளைத் தடுக்கப் பறக்கும் படையினர் தீவிரமாகக் கண்காணித்து வந்தாலும், ஆங்காங்கே ரகசிய இடங்களில் மது விற்பனை நடப்பதாகப் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தலையொட்டி கடந்த 3 நாட்களாகத் டாஸ்மாக் மது பானக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்பவர்கள் மற்றும் வாக்காளர்களுக்கு மது விநியோகம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. கிள்ளியூர் தொகுதியில் எழுந்துள்ள புகாரைத் தொடர்ந்து அங்குள்ள பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், கூடுதல் போலீசார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.