அதிர்ச்சி... உள்ளாடைக்குள் பழைய கேள்வித்தாள், சிம் கார்டுகளை மறைத்து நீட் தேர்வு எழுத வந்தவர் கைது!

 

நாடு முழுவதும் நேற்று  தீவிர சோதனைகளுக்கு மத்தியில் நீட் மறுதேர்வு நடைபெற்ற நிலையில், உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள தேர்வு மையம் ஒன்றில் உள்ளாடைக்குள் பழைய கேள்வித்தாள் மற்றும் சிம் கார்டுகளை மறைத்து வைத்துத் தேர்வு எழுத முயன்ற பிரின்ஸ் துபே என்ற மாணவரைக் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

தேசியத் தேர்வுகள் முகமை கடுமையான டிஜிட்டல் மற்றும் அசுரப் பாதுகாப்பு வளையத்தின் கீழ் நடத்திய இந்த மறுதேர்வின் போது வாரணாசி மையத்தில் நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  வாரணாசியில் உள்ள தேர்வு மைய நுழைவாயிலில் தேர்வு எழுத வந்த மாணவ, மாணவிகளைக் காவல் துறையினர் தீவிரமாகப் பரிசோதித்துக் கொண்டிருந்தனர். அப்போது, பிரின்ஸ் துபே என்ற மாணவரின் நடத்தையில் போலீசாருக்கு பலத்த சந்தேகம் எழுந்தது.

சந்தேகத்தின் அடிப்படையில் அந்த மாணவரைத் தனியறைக்கு அழைத்துச் சென்று போலீசார்  தீவிர உடற்சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது, அவர் தனது உள்ளாடைக்குள் பழைய நீட் தேர்வு கேள்வித்தாள் மற்றும் சிம் கார்டுகளை ரகசியமாக மறைத்து வைத்திருந்தது கண்டறியப்பட்டு, அவை உடனடியாகப் பறிமுதல் செய்யப்பட்டன. முறைகேடு முயற்சியில் ஈடுபட்ட அந்த மாணவரைப் போலீசார் தேர்வு எழுத அனுமதிக்காமல் உடனடியாகக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்ட மாணவர் பிரின்ஸ் துபே உத்தரப் பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும், அவர் மத்தியப் பிரதேச மாநிலத்தில் தங்கியிருந்து நீட் தேர்வுக்காகப் பிரத்யேகப் பயிற்சி பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.

தேர்வு மையங்களுக்குத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வினாத்தாள்கள் கொண்டு வரப்பட்டு, நாடு முழுவதும் 5,440 மையங்களில் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் தேர்வு எழுதியுள்ள சூழலில், வாரணாசியில் அரங்கேறியுள்ள இந்த ஆள்மாறாட்ட அல்லது முறைகேட்டு முயற்சி சம்பவம் கல்வி வட்டாரங்களிலும் அப்பகுதியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைதான மாணவரிடம் ஏதேனும் தேர்வு மோசடி கும்பலுக்குத் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாகப் புலனாய்வு செய்து வருகின்றனர்.