அதிர்ச்சி... இறந்த சகோதரியின் எலும்புக்கூடுடன் வங்கிக்கு வந்த நபரால் பரபரப்பு... ஒடிசாவில் அரங்கேறிய அவலம்!
ஒடிசா மாநிலத்தில் ஒரு நபர் தனது உயிரிழந்த சகோதரியின் எலும்புக்கூட்டை வங்கிக்குக் கொண்டு வந்த சம்பவம், வங்கி நிர்வாகங்களின் செயல்பாடுகள் மற்றும் சாமானிய மக்களின் அவலநிலையை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
ஒடிசாவின் கியோன்ஜார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிது முண்டா என்பவரின் சகோதரி இரண்டு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது வங்கித் திட்டத்தில் இருந்த ₹19,300 பணத்தை எடுப்பதற்காக ஜிது முண்டா பலமுறை வங்கிக்கு அலைந்துள்ளார். ஆனால், வங்கி அதிகாரிகள் முறையான ஆவணங்கள் இல்லை எனக் கூறி பணத்தைத் தர மறுத்ததோடு, அவரை அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது.
வங்கி அதிகாரிகளின் மனிதாபிமானமற்ற போக்கினால் விரக்தியடைந்த ஜிது முண்டா, புதைக்கப்பட்ட தனது சகோதரியின் உடல் சிதைந்து எலும்புக்கூடாக மாறிய நிலையில், அதனைத் தோளில் சுமந்துக் கொண்டு நேரடியாக வங்கிக்கு வந்துள்ளார். "இதோ என் சகோதரி வந்துவிட்டார், இப்போது பணத்தைக் கொடுங்கள்" என்று அவர் கேட்டபோது வங்கியிலிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர்.
இந்தச் சம்பவத்தை அடுத்து அங்கு வந்த போலீசார், எலும்புக்கூட்டை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வங்கியின் கெடுபிடிகளால் ஒரு சாமானிய மனிதன் எந்த அளவிற்கு மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பான் என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி எனப் பலரும் சமூக வலைதளங்களில் வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து வருகின்றனர்.