அதிர்ச்சி... தஞ்சையில் கந்துவட்டி கொடுமையால் ஒருவர் தற்கொலை!
தஞ்சாவூர் மாவட்டம் வாட்டாத்திக்கோட்டை அருகே, கந்துவட்டி கும்பலின் தொடர் மிரட்டல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக லேத் பட்டறை உரிமையாளர் ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
காவல்துறை தரப்பில் கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வரும் நிலையிலும், கந்துவட்டிக் கொடுமையால் ஒரு உயிர் பறிபோயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் வாட்டாத்திக்கோட்டை பகுதியில் லேத் பட்டறை நடத்தி வந்தவர் சரவணன். இவர் தனது தொழில் தேவைக்காகவும், குடும்பச் சூழ்நிலை காரணமாகவும் அப்பகுதியைச் சேர்ந்த சிலரிடம் ரூபாய் 2 லட்சம் வரை கடனாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதற்காக அவர் வட்டிப் பணத்தைத் தொடர்ந்து செலுத்தி வந்த நிலையிலும், கந்துவட்டி கும்பல் அவரிடம் அநியாய வட்டி கேட்டு நெருக்கடி கொடுத்து வந்துள்ளது. ஒரு கட்டத்தில், வாங்கிய அசல் தொகையான 2 லட்சத்திற்கு, வட்டித் தொகையாக மட்டுமே ரூபாய் 10 லட்சம் தர வேண்டும் என அந்தக் கும்பல் சரவணனை மிரட்டத் தொடங்கியுள்ளது.
சரவணனால் அவ்வளவு பெரிய தொகையைக் கொடுக்க முடியாததால், கந்துவட்டி கும்பல் அவரது லேத் பட்டறைக்கே நேரில் சென்று மிரட்டியுள்ளது. "பணத்தைத் தராவிட்டால், உன்னுடைய லேத் பட்டறையை எங்கள் பெயருக்கு எழுதித் தர வேண்டும்" என்று கூறிப் பகிரங்கமாக அச்சுறுத்தியுள்ளனர்.
தன்னுடைய வாழ்வாதாரமாக இருக்கும் கடையையே பறிக்க முயன்றதாலும், அவர்களின் தொடர் மிரட்டல்களாலும் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளான சரவணன், வேறு வழியின்றி தனது கடையிலேயே விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சரவணனின் மரணத்தைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாட்டாத்திக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அப்பாவித் தொழிலாளியைக் கந்துவட்டி கேட்டு மிரட்டி, தற்கொலைக்குத் தூண்டிய அந்தக் கும்பலைச் சேர்ந்த நபர்கள் யார் என்பது குறித்துப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள கந்துவட்டி ஆசாமிகளைப் பிடிக்கத் தனிப்படையும் அமைக்கப்பட்டுள்ளது.