அதிர்ச்சி... இஸ்ரோவை விட்டு வெளியேறும் 100க்கும் மேற்பட்ட  விஞ்ஞானிகள்...   விண்வெளித்துறை அவசரச் சுற்றறிக்கை!

 

இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோவில் பணியாற்றி வந்த மூத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விஞ்ஞானிகள் சுமார் 100 முதல் 120 பேர் வரை கடந்த சில மாதங்களில் தங்களின் பணிகளைத் திடீரென ராஜினாமா செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக இந்தியாவின் மிக முக்கியத் தேசியத் திட்டங்களான சந்திரயான்-3 மற்றும் மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் போன்ற புகழ்பெற்ற திட்டங்களில் பணியாற்றிய முக்கிய விஞ்ஞானிகளும் இதில் அடங்குவர். இந்தத் திடீர் மனிதவளப் பற்றாக்குறை காரணமாக இஸ்ரோவின் பல்வேறு முக்கிய விண்வெளித் திட்டங்களைச் செயல்படுத்துவதில் சவால்களும் கால தாமதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து விண்வெளித் துறையில் உள்ள அரிய தொழில்நுட்ப மேலாண்மை மற்றும் விஞ்ஞானிகளின் திறமைகளைப் பாதுகாக்கும் நோக்கில், இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்வதில் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து விண்வெளித்துறை அவசரச் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ககன்யான் மற்றும் நாட்டின் பிற முக்கிய விண்வெளித் திட்டங்களில் பணியாற்றும் 'குரூப் ஏ' அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களின் ராஜினாமா அல்லது விருப்ப ஓய்வு விண்ணப்பங்களை இனி வழக்கமான ஒன்றாகக் கருதி உடனடியாக ஏற்றுக்கொள்ளக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கியத் திட்டங்களில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் தங்களது பொறுப்பில் உள்ள பணிகள் முழுமையாக முடிவடையும் வரை கட்டாயம் பணியில் நீடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு கடந்த 2020 நவம்பர் 25-ந்தேதியன்று பிறப்பிக்கப்பட்டிருந்த முந்தைய உத்தரவின்படி, 'குரூப் ஏ' அதிகாரிகளின் ராஜினாமாவை அந்தந்த இஸ்ரோ மையங்களின் இயக்குனர்களே நேரடியாக ஏற்று ஒப்புதல் அளிக்க முழு அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கை அந்த நடைமுறையை ரத்து செய்து, விண்வெளித் துறைக்கான இறுதி முடிவு எடுக்கும் அதிகாரத்தை அரசாங்கம் நேரடியாகத் தன் கைக்கு மாற்றியுள்ளது