அதிர்ச்சி... உல்லாசத்திற்கு இடைஞ்சலாக இருந்த மகளைக் கொன்று ஆற்றில் புதைத்த தாய்!
தனது இரண்டாவது கணவருடன் உல்லாசமாக வாழ்வதற்கு இடையூறாக இருந்த இரண்டரை வயது மகளை, பெற்ற தாயே அடித்துக் கொலை செய்து ஆற்றில் புதைத்த அதிர்ச்சி சம்பவம் ஆந்திர மாநிலம் திருப்பதியில் அரங்கேறியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருப்பதி தெலுங்கு நகர் பகுதியில் வசித்து வந்த ஆஷலதா (19) மற்றும் அவரது இரண்டாவது கணவர் ரெட்டிகுமார் ஆகியோரை போலீசார் இந்த வழக்கில் கைது செய்துள்ளனர். ஆஷலதாவிற்கும் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து, துர்கா (2.5 வயது) என்ற பெண் குழந்தை பிறந்தது. கருத்து வேறுபாடு காரணமாக ராஜேஷைப் பிரிந்த ஆஷலதா, தனது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் ரெட்டிகுமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, அது காதலாக மாறியது. பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி 7 மாதங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ரெட்டிகுமாரின் பெற்றோர் ஆஷலதாவையும், அவரது முதல் கணவருக்குப் பிறந்த குழந்தையையும் ஏற்க மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த ரெட்டிகுமார், "இந்தக் குழந்தை இல்லாவிட்டால் நம்மை வீட்டில் சேர்த்துக் கொள்வார்கள், நாம் சந்தோஷமாக வாழலாம். எனவே குழந்தையைக் கொன்று விடு" என ஆஷலதாவைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, குழந்தை துர்காவை இருவரும் சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளனர். பின்னர் யாருக்கும் தெரியாமல் குழந்தையின் உடலை எடுத்துச் சென்று அருகில் உள்ள ஆற்றுப் பகுதியில் புதைத்துள்ளனர். குழந்தை திடீரென காணாமல் போனது குறித்து அக்கம் பக்கத்தினர் எழுப்பிய சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
திருப்பதி போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், ஆஷலதாவும் ரெட்டிகுமாரும் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்தனர். இறுதியில், குழந்தையைக் கொலை செய்து புதைத்த உண்மையை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் குழந்தையின் உடலைத் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பினர். பெற்ற மகளையே தாய் அடித்துக் கொன்ற இந்தச் சம்பவம் திருப்பதி பகுதியில் பெரும் சோகத்தையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.